டி20 உலகக்கோப்பை.. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்!
டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் மகுடத்தைத் சூடப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அதே பலமான அணியுடன் இந்தியா களமிறங்கியுள்ளது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களுடன் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற அனுபவ வீரர்கள் அணியில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிக்கு வந்த நியூசிலாந்து அணியில், காயத்திலிருந்து மீண்டுள்ள ஜேக்கப் டஃபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் முதல் அணி மற்றும் 3 முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையைப் படைக்கும்.
