டி20 உலகக் கோப்பை.. இன்று முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்து!
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் இதுவரை ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல் அசுர பலத்துடன் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு வந்துள்ளது. மறுபுறம் ஏற்ற இறக்கங்களுடன் போராடி அரையிறுதி வாய்ப்பைப் பிடித்துள்ள நியூஸிலாந்து, தனது 'நாக்-அவுட்' அதிர்ஷ்டத்தை நம்பிக் களமிறங்குகிறது.
தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் தலைமையில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சமபலத்துடன் உள்ளது. குவின்டன் டி காக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அதிரடி காட்டக் காத்திருக்கின்றனர். பௌலிங்கில் லுங்கி இங்கிடி மற்றும் இளம் வீரர் கவினா மபாகா முக்கியத் தூண்களாக உள்ளனர்.

நியூஸிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவின் ஆல்-ரவுண்ட் ஆட்டம் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். குறிப்பாகக் கடந்த இரண்டு போட்டிகளில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். பின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபர்ட் தொடக்கத்தில் அதிரடி வழங்கினால் நியூஸிலாந்து சவாலாக இருக்கும்.
சர்வதேச டி20 போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா 12 முறை வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. நியூஸிலாந்து 7 முறை வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் நியூஸிலாந்து எப்போதும் தென்னாப்பிரிக்காவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் அணியாகவே இருந்து வருகிறது.

கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம், சராசரி ஸ்கோர்: 180. இன்று இரவு 7 மணிக்கு துவங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நேரடி ஒளிப்பரப்பு செய்கின்றன. இங்கிலாந்தின் ரிச்சர்டு இல்லிங்வொர்த் மற்றும் அலெக்ஸ் வார்ஃப் ஆகியோர் கள நடுவர்களாகச் செயல்படுவர். இந்தியாவின் நிதின் மேனன் மூன்றாவது (டிவி) நடுவராகவும், ஜவகல் ஸ்ரீநாத் போட்டி நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
