சோகம்... 30 மாத்திரைகளை உட்கொண்டு 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை !
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் திடீரெனத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் படித்து வந்த அந்த மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்து வீட்டில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டுள்ளார். மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டதால் மாணவனுக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டின் உள்ளேயே மயங்கி விழுந்து கிடந்துள்ளான். வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் மாணவன் மயங்கிய நிலையிலிருந்ததைக் கண்டு அலறியடித்துக் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடினர்.

உடனடியாக மயக்கமடைந்த மாணவனை மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாணவனின் மரணம் குறித்துக் காவல் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி காவல் துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்னர்.மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது குடும்பப் பிரச்சினையா என்ற கோணத்தில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு பயிலும் மாணவன் 30 மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை உருவாக்கியுள்ளது.
