அமைச்சர் காந்தியை வீழ்த்திய தவெக தாஹிரா... மகனுக்கு வழங்கிய வாய்ப்பைத் தட்டிப்பறித்தும் பயனில்லை!
ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் ஆர். காந்தியை எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட தாஹிரா அதிரடி வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக இந்தத் தொகுதியில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர் தனது தந்தையே மீண்டும் போட்டியிடுவார் என விலகிக்கொண்டார். மகனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை தந்தை தட்டிப்பறித்ததாக எழுந்த சலசலப்பு, தற்போது தேர்தல் முடிவில் திமுக-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்வளம் மிக்க ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் தாஹிரா கடும் போட்டியை அளித்து வந்தார். பல சுற்றுகளில் காந்தி முன்னிலை வகித்தாலும், கடைசி சுற்றுகளில் முடிவுகள் தலைகீழாக மாறின. இறுதியில் தாஹிரா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சரைத் தோற்கடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
அமைச்சர் காந்தி இதுவரை தான் போட்டியிட்ட 7 தேர்தல்களில் 4 முறை வெற்றி பெற்றுள்ளார், இது அவரது 3-வது தோல்வியாகும். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக-வின் வெற்றியைப் பதிவிட்ட நிலையில், தவெக-வின் இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்களும், ஆட்சி மாற்றத்திற்கான மக்களின் விருப்பமுமே தாஹிராவின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
