நோட் பண்ணிக்கோங்க... பழனியில் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை தற்காலிக நிறுத்தம்!
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் முக்கியச் சேவைகளில் ஒன்றான ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
பழனி மலைக் கோவிலுக்குப் பக்தர்கள் விரைவாகவும், இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியும் செல்வதற்காக ரோப் கார் சேவை பெரும் உதவியாக இருந்து வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் பொருட்டு, ஆண்டுதோறும் இந்த ரோப் கார் அமைப்பில் உள்ள இரும்பு வடக் கயிறுகள், மோட்டார்கள் மற்றும் சுழலும் சக்கரங்கள் உள்ளிட்ட பாகங்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான முக்கிய வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வரும் ஜூலை 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை முழுமையாக நிறுத்தப்படுவதாகத் திருக்கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரோப் கார் சேவை நிறுத்தப்படும் இந்த 45 நாட்களிலும், பழனி மலைக் கோவிலுக்குச் சென்று முருகப் பெருமானை வழிபட வரும் பக்தர்கள் மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்குச் செல்ல வழக்கம்போல மின் இழுவை ரயில் சேவைகள் தடையின்றி இயக்கப்படும். உடல் ஆரோக்கியம் உள்ள பக்தர்கள் மற்றும் நடைப்பயணமாகச் செல்ல விரும்பும் ஆன்மீகவாதிகள் பிரதான படிப்பாதை மற்றும் அகலமான யானைப் பாதையைப் பயன்படுத்தி மலைக்குச் செல்லலாம்.
இந்த 45 நாட்கள் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவடைந்த பின்னர், ரோப் கார் அமைப்பின் பாதுகாப்புத் தன்மை குறித்து அரசுத் துறை வல்லுநர்கள் குழுவினர் சோதனை நடத்துவார்கள். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் ரோப் கார் சேவை மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
