பிரபல தமிழ்பட தயாரிப்பாளர், மனைவியுடன் கைது... ரூ.15 கோடி நகை மோசடி வழக்கு!
தமிழ் சினிமாவில் 'மாயாண்டி குடும்பத்தார்' உள்ளிட்ட பிரபலமான திரைப்படங்களைத் தயாரித்த திரைப்படத் தயாரிப்பாளர் செல்வகுமார் மற்றும் அவரது மனைவி மீது ரூ. 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
திரைப்படத் தயாரிப்பாளரான செல்வகுமார், சொந்தமாக நகை வணிகமும் செய்து வருகிறார். தொழிலுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த பிரபல நகை நிறுவனத்திடம் இருந்து சுமார் 10.5 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வாங்கியுள்ளார். வாங்கிய நகைகளுக்கான நிலுவைத் தொகையை (ரூ. 15 கோடி) நீண்ட நாட்களாகத் தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் அளித்த புகாரின் பேரில் மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

வழக்கின் அடிப்படையில் தயாரிப்பாளர் செல்வகுமார் மற்றும் அவரது மனைவி பிந்து செல்வகுமார் ஆகிய இருவரையும் மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தங்க நகை மோசடி விவகாரத்தில் தம்பதியினர் தவிர மேலும் 3 நபர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
