தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.. இன்று சென்னை வருகிறார் கவர்னர் அர்லேகர்!

 
விஜய் ஆளுநர் அர்லேகர் விஜய் ஆளுநர் அர்லேகர்

தமிழகத்தில் புதிய அரசு அமைந்து முதற்கட்ட அமைச்சரவை பதவியேற்பு முடிந்த நிலையில், காலியாக உள்ள துறைகளை நிரப்புவதற்கும், கூட்டணி கட்சிகளை இணைப்பதற்கும் ஏதுவாக நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகத் தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை வருகிறார்.

கடந்த மே 4-ம் தேதி வெளியான தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய், கடந்த மே 10-ம் தேதி புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

 “கவர்னர் சூழ்ச்சிக்காரர்... விஜய் அதில் சிக்க கூடாது”

தற்போது சட்டசபையில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், த.வெ.க கூட்டணிக்கு மிக வலுவான ஆதரவு உள்ளது. த.வெ.க-விற்கு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. இவர்களுடன் அ.தி.மு.க.வில் இருந்து பிளவுபட்ட 25 எம்.எல்.ஏ.க்களும் த.வெ.க.வை ஆதரிப்பதால், சட்டசபையில் த.வெ.க கூட்டணியின் பலம் 144 ஆக உயர்ந்து, அரசு மிகவும் ஸ்திரமான நிலையில் உள்ளது.

கடந்த மே 16-ம் தேதி முதலமைச்சர் உள்ளிட்ட 10 பேருக்கு மட்டுமே துறைகள் ஒதுக்கப்பட்டன. வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் இன்னும் ஒதுக்கப்படாமல் முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. தற்போது கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் முதலமைச்சர் மற்றும் 33 அமைச்சர்கள் வரை அமைச்சரவையில் இடம்பெறலாம்.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவருக்கு மீன்வளத்துறை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. த.வெ.க அரசை ஆதரிக்கும் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் உட்பட 6 முக்கிய முகங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கப் பிரகாசமான வாய்ப்புள்ளது. எஞ்சிய முக்கிய துறைகள் த.வெ.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்படக் கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசியல் நகர்வுகளுக்கு இடையே, புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காகக் தமிழக கூடுதல் பொறுப்பு கவர்னரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை வந்தடைகிறார். நாளை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெறலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.