தமிழக அமைச்சரவை 3 நாட்களில் விரிவாக்கம்... கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் பங்கீடு?!

 
விஜய் விஜய்

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 17-வது சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடன் முதற்கட்டமாக என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ. செங்கோட்டையன் உட்பட 9 முக்கிய நிர்வாகிகள் மட்டுமே தற்பொழுது அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டிலேயே, தங்களோடு கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் உரிய பங்கு தரப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்ததால், தற்பொழுது அமைச்சரவை விரிவாக்கப் பணிகள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய்

இதன்படி, தேர்தலுக்குப் பின்பு புதிய அரசிற்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 முக்கிய இடங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து தற்பொழுது அரசுக்கு ஆதரவளிக்கும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணியினருக்கு 5 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், விசிக தரப்பிலும் தற்போது அமைச்சரவையில் ஒரு இடம் எதிர்பார்க்கப்படுவதால், அதுகுறித்தும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் முதலமைச்சர் விஜய் அடுத்த 3 நாட்களில் இறுதிப் பட்டியலைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

விஜய்

புதிய 17-வது சட்டமன்றத்தில் முதலமைச்சரையும் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெற உள்ள வேளையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 26 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது. அமைச்சரவைப் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு புதிய அமைச்சர்களுக்குச் சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேக்கர் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

அதனைத் தொடர்ந்து புதிய அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி, 2026-27-ஆம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட் தாக்கல் உட்படப் பல்வேறு மானியக் கோரிக்கை விவாதங்களுடன் 40 நாட்களுக்குக் குறையாமல் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.