தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்... 3 பேருக்கு ‘கல்தா’!

 
அமைச்சரவை

தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகள், துறை சார்ந்த அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள், சொந்தத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சட்டப்பேரவைச் செயல்பாடு மற்றும் த.வெ.கவினரிடம் நடந்துகொண்ட முறை போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக முதல்வர் விஜய்யின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் களமிறக்கப்பட்டு ஒரு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

இந்த அறிக்கையின் அடிப்படையில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் போதிய திருப்தி அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. துறைச் செயலாளர்களை நேரில் அழைத்து விசாரித்த முதல்வர் விஜய்யும் இதனை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு பெண் அமைச்சர் உள்பட த.வெ.கவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 4 அமைச்சர்களில் ஒருவருக்கு இலாகா மாற்றப்பட வாய்ப்புள்ளது. தவெக அமைச்சர்களில் ஒருவர் தனக்கு பெரிய துறை எதற்கு என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவருக்கும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.

சுமார் ஒரு மாத காலம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த அமைச்சரவை மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.