"தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்கத் தயார்" - காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் உருக்கம்!

 
விஜய்

காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்றும், இதில் அரசியல் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்பதாகவும் குறிப்பிட்டார். கர்நாடகாவைப் போலத் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூடத் தமிழக அரசு கூட்ட மறுப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

மேகதாது

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், "காவிரி நீர் நமக்கு உயிர் ஆதாரம். இதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்குச் சிறிதும் இல்லை. மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்றார்.

"காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் பக்கத்து மாநிலமான கர்நாடகாவிற்கு நேரில் சென்று அம்மாநில முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நான்தான் முதலில் கோரிக்கை வைத்தேன். உலகில் எதிரி நாடுகளே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைக் காணும்போது, பக்கத்து மாநிலத்துடன் பேசிப் பார்ப்பதில் தவறில்லை" எனக் கூறினார்.

காவிரி மேகதாது

பெங்களூரு சென்று பேச்சுவார்த்தை நடத்தும் போது ஏதேனும் அவமானம் நேரிட்டால் என்ன செய்வது எனப் பலரும் தன்னிடம் கேட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், "என் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்கிக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்" எனப் பேரவையில் உருக்கமாகத் தெரிவித்தார்.