காலங்களைக் கடந்த கவிதை ஆளுமை - கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் முதல்வர் விஜய் புகழஞ்சலி!
தமிழ் திரையிசை வரலாற்றிலும், நவீன தமிழ் இலக்கிய உலகிலும் தனது தத்துவப் பாடல்களால் நீங்கா முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசனுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் நெஞ்சார்ந்த புகழ் வணக்கங்களைத் தெரிவித்துள்ளார். கவியரசரின் நூற்றாண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அவரது அழியாத படைப்புகள் குறித்தும், தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கவியரசர் கண்ணதாசனின் எழுத்தாற்றல் குறித்துப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், "காலங்களைக் கடந்தும் தற்போதைய இளைய தலைமுறையினரையும் நல்வழிப்படுத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாகக் கவியரசரின் படைப்புகள் திகழ்கின்றன. மனித வாழ்வின் இன்பம், துன்பம், காதல், தத்துவம், வாழ்வியல் யதார்த்தங்கள் என அனைத்தையும் மிக எளிய சொற்களில் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் தன் பாடல்கள் மூலம் கொண்டு சேர்த்தவர் கண்ணதாசன்" எனத் தனது செய்தியில் உருகியுள்ளார்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம், கவிதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்கள் எனத் தமிழ் இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் கண்ணதாசன் முத்திரை பதித்தவர் என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் அன்றாடம் ஒலித்துக் கொண்டிருக்கும் அவரது திரையிசைப் பாடல்கள், என்றும் அழியாத காலப் பெட்டகங்கள் ஆகும். எத்தனையோ கவிஞர்கள் தோன்றினாலும் திரையிசையில் கண்ணதாசன் உருவாக்கிய தடம் தனித்துவமானது. நம் உயிர்மொழியாம் தமிழ்மொழி இவ்வுலகில் உள்ளவரை கவியரசரின் புகழும், அவரது காலத்தால் அழியாத படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என முதலமைச்சர் விஜய் தனது புகழஞ்சலியில் மனதாரப் பாராட்டியுள்ளார்.
