மீண்டும் டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் விஜய் - நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை நேற்று முன் தினம் நிறைவு செய்து சென்னை திரும்பிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அடுத்த இரு வாரங்களில் மீண்டும் டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜூன் மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இத்தொடர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவராக இருந்து, அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய் மேற்கொள்ளும் இரண்டாவது டெல்லி பயணம் இதுவாகும். மத்திய அரசின் கொள்கை வகுக்கும் அமைப்பான நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழகத்திற்கான சிறப்பு நிதிப் பங்கீடு, உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் தேவைகளை வலியுறுத்துவதற்காக ஜூன் 11-ஆம் தேதி அவர் டெல்லி செல்கிறார்.

விஜய்

மாநிலத்தின் நிதித் தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் இக்கூட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், முதலமைச்சர் நேரில் சென்று இதில் பங்கேற்கவுள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முந்தைய பயணத்தின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்திப்பதாக இருந்த நிகழ்வு இருதரப்பின் அலுவல் நெருக்கடிகள் காரணமாகத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போதைய புதிய பயணத் திட்டத்தின்படி, டெல்லியில் உள்ள 10 ஜனபத் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேச அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்

தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக கூட்டணி அரசு சுமுகமாகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற மற்றும் மாநில அளவிலான அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தனது முதல் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம், தமிழக மீனவர் பாதுகாப்பு மற்றும் மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் விஜய் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.