குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக்: 4 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய நான்கு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டானியா, ட்ரீம் பேக், எலைட் நேச்சுரல், ஐடிசி ஆகிய நிறுவனங்கள் கேக்குகளைத் தயாரித்து வழங்க உள்ளன. இதற்கான ஒப்பந்த மதிப்பு ரூ.7.34 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் குறிப்பிட்ட மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேக் பாக்கெட்டுகளை நவம்பர் 9 முதல் 11-ம் தேதிக்குள் கிடங்குகளுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு முன்பு கேக்குகளின் தரம், எடை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதிக்க உள்ளனர். நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
