பாஜக கூட்டணியிலிருந்து விலகியது தமிழ் மாநில காங்கிரஸ்... பிரிதலுக்கான காரணம் என்ன? - ஜி.கே. வாசன் பேட்டி!

 
ஜி.கே.வாசன் ஜி.கே.வாசன்

சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அவசரச் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்து, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட சுமார் 600-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விகள் குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற 600 பேரில் சுமார் 450-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தமாகா தொடர்ந்து பிற கட்சிகளின் கூட்டணியில் நீடிப்பதால் கட்சியின் தனித்தன்மையும், அடிமட்டத் தொண்டர்களின் பலமும் முற்றிலுமாக அழிந்து வருவதாகக் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

வாசன்

செயற்குழு முடிவுகளைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், "தற்போதைய கூட்டணி அரசியலால் எங்களது தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சி பெருமளவு குறைந்து வருவதாகக் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  கருதுகிறார்கள். தமாகா தனது சொந்த பலத்துடன் தனித்தன்மையோடு களத்தில் செயல்பட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து நாங்கள் பல்வேறு பெரிய கட்சிகளின் கூட்டணியில் இருந்த காரணத்தினால், கட்சியின் தனிப்பட்ட வாக்கு வங்கியும், இயக்கத்தின் வலுவும் பெருமளவு குறைந்துவிட்டது என்பது கசப்பான உண்மை" என்று  கூறினார்.

மேலும் பேசிய அவர், "சமீபகாலமாக நடைபெற்ற தேர்தல்களில் எங்களால் தனித்துப் போட்டியிட்டுப் பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை; அதேபோல தமாகா பங்கேற்ற கூட்டணிகளும் எதிர்பார்த்த வெற்றியைப் பதிவு செய்யவில்லை. இதனால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வரும் வரை எங்களது கட்சி தமிழகத்தில் எவ்விதக் கூட்டணியும் இன்றித் தனித்தன்மையோடு மட்டுமே செயல்பட்டு, கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை மீண்டும் எங்களது அடித்தளத்தைப் பலப்படுத்தப் போர்க்கால அடிப்படையில் முடிவு செய்துள்ளோம். இனிவரும் காலங்களில் தேர்தல் நேரத்தில் மட்டுமே தற்காலிகக் கூட்டணி அமைக்கப்படும் என்று செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

வாசன்

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க உடனான உறவு குறித்துப் பேசிய வாசன், "மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (இருந்தும், தமிழக அ.தி.மு.க கூட்டணியில் இருந்தும் தமாகா நட்பு கட்சியாக மட்டுமே தற்காலிகமாக வெளியில் வருகிறது. பா.ஜ.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுடனும் தமாகாவுக்கு எவ்விதச் சண்டையோ அல்லது மனஸ்தாபமோ துளியும் இல்லை.

தமிழகத்தில் சமீபகாலமாக நடந்த எதிர்பாராத அரசியல் மாற்றங்களால் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒருவித ஏமாற்றமே கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி தர்மத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகச் செயல்பட்ட கட்சி எங்களது தமிழ் மாநில காங்கிரஸ் தான். பல்வேறு கடுமையான சவால்களைத் தாண்டி, கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காகப் பொறுப்புணர்ச்சியோடு தமாகா என்றும் உழைத்துள்ளது. தற்போது எங்களது இயக்கத்தைக் காப்பாற்றவும், பலப்படுத்தவும் வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதால் மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று ஜி.கே.வாசன் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.