தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! ஒரே நாளில் 1,320 பேர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி
Updated: Sep 18, 2026, 10:17 IST
தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 1,320 பேர் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதே நேரத்தில், ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 17-ம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டில் தமிழகத்தில் இதுவரை 16,577 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில அளவில் டெங்கு பாதிப்பில் சென்னை தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் உள்ளது. செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் மட்டும் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளாலும் சென்னையில் 156 பேர் ஒரே நாளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு மற்றும் பருவமழை தொடர்பான காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 25,000-க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெங்கு பாதிப்பு அதிகரித்து வந்தாலும், இது வழக்கத்திற்கு மாறான அல்லது அபாயகரமான பரவல் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பருவமழை காலத்தில் டெங்கு பாதிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படுவது இயல்பானது என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.காய்ச்சல் பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு காய்ச்சல் முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் தனி டெங்கு வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
