போலீசார் மீதான ஊழல் புகார்களைத் தெரிவிக்கத் தனிப்பிரிவு - தமிழக டிஜிபி அறிவிப்பு!

 
போலீசார் காவல்துறை காவல் காவலர்

தமிழ்நாடு காவல்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கவும் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களில் 'உள்விசாரணைக் பிரிவு'  அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான லஞ்சம், ஊழல், நிதி முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஒழுங்கீனச் செயல்களைத் தடுப்பதும், அவை குறித்துத் தீவிர விசாரணை நடத்துவதும் இந்தப் பிரிவின் முதன்மை நோக்கமாகும்.

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

பொதுமக்கள் தங்களது புகார்களை எளிய முறையில் உடனுக்குடன் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாகத் தனி மொபைல் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும். புகார் அளித்த காரணத்திற்காக எவ்வித அச்சறுத்தலோ, துன்புறுத்தலோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளோ இருக்காது என காவல்துறை உறுதியளித்துள்ளது. பெறப்படும் அனைத்துப் புகார்களும் பாரபட்சமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த உள்விசாரணைக் பிரிவின் செயல்பாடுகளை உயர் காவல் அதிகாரிகள் நேரடியாகத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.