தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம் - புதிய தலைவராக கே.சங்கர் நியமனம்!
தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற தீவிரப் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில், தமிழக சிறைத்துறைத் தலைவராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுப் புதிய உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஐபிஎஸ் அதிகாரி கே. சங்கர் சிறைத்துறை கூடுதல் காவல்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைத்துறை தலைவருடன் சேர்த்து, மாநிலத்தில் மேலும் 5 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக் கைதிகள், தங்களுக்கு வலிப்பு ஏற்பட்டது போல நாடகமாடிச் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு 17 கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்ட போதிலும், சிறைத்துறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பலத்த பாதுகாப்பு அலட்சியம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
ஏற்கனவே இச்சம்பவத்தில் அலட்சியமாக இருந்த 9 சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறைத்துறையின் உயர்மட்டப் பொறுப்பிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தேனி சிறை விவகாரத்தில், தலைமை அதிகாரியே மாற்றப்பட்டிருப்பது காவல் துறை வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
