தமிழக காவல்துறைக்குப் பெருமை... தேசியளவில் முதலிடம் பிடித்த பேரிடர் மீட்புப்படை... காவல்துறைக்குப் பெருமை!

 
தேசிய பேரிடர் மீட்பு படை

உத்தரப் பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8-வது பட்டாலியனில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சிபிஆர்என் அவசரகால மீட்புத் திறன் போட்டியில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 13-ம் அணியைச் சேர்ந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை அணியினர் தெற்கு மண்டலம் சார்பில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டும் இதே தமிழக அணி அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான 27-வது காவல்துறை வாத்தியக் குழுப் போட்டியில், தமிழக காவல்துறை வாத்திய இசைக்குழுவினர் ஆண்கள் பிரிவு பியூகிள் கால் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.

 இந்தப் போட்டிகளில் சாதனை படைத்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களைத் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துக்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.