தமிழக தேர்தல்... சென்னையில் மட்டும் 21,000 போலீசார்.. 2,500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் - 24 மணி நேரத் தீவிரக் கண்காணிப்பு!

 
பாதுகாப்பு கண்காணிப்பு பாதுகாப்பு கண்காணிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் சென்னையில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்தப் பெருநகர காவல்துறை ‘மெகா’ பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகமும் இன்று தேர்தல் காய்ச்சலில் இருக்கும் நிலையில், சென்னை மட்டும் ஒரு பாதுகாப்புக் கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை

சென்னையில் மட்டும் சுமார் 21,000 தமிழகப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள 2,500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் அச்சமின்றி வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, நேற்று இரவு முதலே நகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் எல்லைகளில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் கண்டறியப்பட்டுள்ள 198 பதற்றமான வாக்குச்சாவடிகளில், பாதுகாப்புப் பணிக்காக மட்டும் 31 கம்பெனி துணை ராணுவப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடி கண்காணிப்பு செய்யப்படுவதோடு, நுண் பார்வையாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையம் பாதுகாப்பு சோதனை

வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசார் அதனை முறையாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்கப் போலீசார் உதவி வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், சென்னை முழுவதும் போலீசாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.