தமிழ்நாடு அரசிதழில் திடீர் திருத்தம் - அமைச்சர் ரமேஷ் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு!

 
அமைச்சர் ரமேஷ்

தமிழக அமைச்சரவையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் பெயரில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு சிறப்பு அரசிதழ் வெளியிட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட G.O.Ms.No.343, 345 மற்றும் 366 ஆகிய அரசாணைகளில், புதிய அமைச்சர்களின் நியமனம் மற்றும் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. அந்த அரசாணைகளில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் பெயர் திரு. ரமேஷ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ரமேஷ்

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சிறப்பு பிழைதிருத்த அறிவிப்பின்படி, இனிவரும் காலங்களில் அமைச்சரின் பெயர் ஆங்கிலத்தில் "Thiru. S.Ramesh" என்றும், தமிழில் "திரு. சீ.ரமேஷ்" என்றும் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்க்குமார் இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இனி வரும் அனைத்து அரசு ஆணைகள், அதிகாரப்பூர்வக் கோப்புகள் மற்றும் அரசிதழ்களில் திருத்தப்பட்ட இந்த புதிய பெயரே இடம்பெறும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது வழக்கமான ஒரு சாதாரண எழுத்துப்பிழை திருத்த நடவடிக்கையா அல்லது அமைச்சரின் முழுப்பெயரை ஆவணங்களில் முறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாற்றமா என்பது குறித்துச் செயலக மற்றும் அரசு வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.