அமைச்சர்களுக்கு ரூ.26 லட்சம்; எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 லட்சம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வாங்குவதற்கான விலை உச்சவரம்பை நிர்ணயித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 1955-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பயணப்படி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு ரூ.26 லட்சம் வரையிலும், மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் கார் வாங்கலாம். இந்தத் தொகையில் வாகனத்தின் விலை, வரிகள், பதிவுக் கட்டணம் மற்றும் காப்பீடு ஆகியவை அடங்கும். இந்த உச்சவரம்பு ஆண்டுதோறும் 5 சதவீதம் உயர்த்தப்படும்.

அனைத்து கார்களும் பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்கவும், அரசு ஜெம் இணையதளம் வழியாகவும் வாங்கப்பட வேண்டும். அமைச்சர்களுக்கான எரிபொருள், பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் செலவுகளை அரசும், முக்கிய சட்டமன்றப் பதவிகளில் இருப்போருக்கான செலவுகளைச் சட்டமன்றச் செயலகமும் ஏற்கும். மற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வழங்கப்படும் வாகனப் படியிலிருந்து இந்தச் செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.
