தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு! அகவிலைப்படி 3% உயர்வு அரசாணை வெளியீடு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தற்போது 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 63 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த உயர்வு கடந்த ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர். அகவிலைப்படி உயர்வால் அவர்களின் மாத வருமானத்தில் கூடுதல் தொகை கிடைக்கும்.
இந்த உயர்வைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,858 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அவ்வப்போது திருத்தி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது 3 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
