'அண்ணன் சீர் திட்டம்' குறித்து தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு... என்னென்ன தகுதிகள்? யார் யாருக்கு கிடைக்காது?

 
பட்டுப்புடவை அண்ணன் சீர்

தமிழ்நாடு அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 'அண்ணன் சீர் திட்டம்' குறித்த முக்கிய வழிகாட்டுதல்களும் தகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் திருமணமாகும் பெண்களுக்குச் சீர்வரிசைகள் வழங்கப்படும்.

திருமணமாகும் மணமக்கள் இருவருமே அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சட்டப்பூர்வ திருமண வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழ்நாடு குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். திருமண நிதியுதவிக்கான வேறு எந்த அரசுத் திட்டங்களிலும் ஏற்கனவே பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.

அண்ணன் சீர் பட்டுப்புடவை

திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து, திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம். சிறப்பாக, 05.10.2026 முதல் 15.01.2027 வரையிலான காலப்பகுதியில் திருமணம் நடைபெறவுள்ளவர்கள் 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnesevai.tn.gov.in மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

தகுதியான பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை சீர்வரிசையாக வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் அடையாள எண் மற்றும் குடும்ப அட்டை எண் மூலம் தகுதி சரிபார்க்கப்பட்டு, திருமணப் பத்திரிகையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அண்ணன் சீர் திட்டம்

ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.

திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் அந்தத் திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்வது கட்டாயமாகும். தகுதியின்மை காரணமாக ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணமும் தெரிவிக்கப்படுவதுடன், மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.