தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' படத் தயாரிப்பாளர் நியமனம்!

 
ஜனநாயகன் தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணா

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு பல்வேறு நிர்வாக மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், மாநில அரசின் மிக முக்கியப் பொறுப்பான புதுடெல்லி சிறப்புப் பிரதிநிதியாக தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கே. வெங்கட் நாராயணா  அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர்  இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து முதற்கட்டமாக ஓராண்டு காலத்திற்கு இந்த நியமனம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பது சாதாரணப் பதவி அல்ல; இது ஒரு மாநில கேபினட் அமைச்சருக்கு  இணையான அந்தஸ்தும், சலுகைகளும், அதிகாரங்களும் கொண்ட ஒரு மிக உயரிய பதவியாகும்.

ஜனநாயகன் தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணா

டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மற்றும் புதிய மத்தியத் திட்டங்களை டெல்லியிலிருந்து முறைப்படிப் பெற்றுத் தரும் ஒரு வலுவான பாலமாகச் செயல்படுவதே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் பிரதான பணியாகும். திரைத்துறையினர் மற்றும் கார்ப்பரேட் வர்த்தக உலகில் கே. வெங்கட் நாராயணா மிகவும் பிரபலமான ஒரு ஆளுமையாவார்.

புகழ்பெற்ற 'கே.வி.என் புரொடக்சன்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான இவர், எச். வினோத் இயக்கத்தில் தற்போதைய முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதன்மைத் தயாரிப்பாளர் ஆவார்.

சினிமா பின்னணிக்கு முன்பாக, இவர் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான 'பிரெஸ்டீஜ் குழுமத்தின்' தலைமை நிர்வாக அதிகாரியாக பல ஆண்டுகள் திறம்படச் செயல்பட்டு, சுமார் ₹70,000 கோடி மதிப்பிலான வர்த்தகக் கட்டமைப்பை நிர்வகித்தவர்.

நிர்வாகத் திறமை மட்டுமின்றி, இவர் ஒரு தகுதிவாய்ந்த சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் கம்பெனி செக்ரட்டரி மற்றும் சட்டப் பட்டதாரி என்ற அசாத்திய கல்வித் தகுதிகளைக் கொண்டவர் என்பதால், டெல்லியில் நிதி சார்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்த இவரே பொருத்தமானவர் எனத் தவெக தலைமை முடிவு செய்துள்ளது.