"விடுதிகளில் வழங்கும் உணவுகளை WhatsApp-ல் அனுப்ப வேண்டும்" - அரசு விடுதிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

 
உணவு சாப்பாடு விடுதி

சமூக நலன் மற்றும் சமூக நீதித்துறையின் கீழ் இயங்கும் அரசு மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், விடுதி காப்பாளர்களுக்குத் தமிழக அரசு புதிய மற்றும் கண்டிப்பான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்தும், உணவு விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்தும் அண்மைக்காலமாகப் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. இதனைத் தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய உத்தரவின்படி, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்குத் தினசரி வழங்கப்படும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகிய மூன்று வேளை உணவுகளையும், அவை பரிமாறப்படும்போது துல்லியமாகப் புகைப்படம் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களை, அந்தந்த மாவட்ட மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ 'வாட்ஸ்அப்' குழுவில் விடுதி காப்பாளர்கள் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் கண்காணிப்பு முறையின் மூலம், விடுதிகளில் அட்டவணைப்படி தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்தபடியே தினசரி நேரலையாகக் கண்காணிக்க முடியும்.

ஏதேனும் ஒரு விடுதியில் உணவின் தரம் குறைவாக இருந்தாலோ அல்லது புகைப்படம் பதிவேற்றத் தவறினாலோ, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசின் இந்த டிஜிட்டல் கண்காணிப்பு முயற்சி, அரசு விடுதி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.