“அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கக் கூடாது” - தமிழக அரசின் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!
அரசின் நிதிச் சுமைகளைக் காரணம் காட்டி, பணிநிறைவு பெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கக் கூடாது என்றும், அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவைகளை அங்கீகரிக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 2009-ஆம் ஆண்டிற்கு முன்பாகப் பணிநிறைவு பெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியம் தவறுதலாகக் கணக்கிடப்பட்டதாகக் கூறி, அதனைப் பாதியாகக் குறைத்துத் தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து 143 ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்த வழக்கில், அரசின் அந்த அரசாணையை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 5 மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துத் தள்ளுபடி செய்தது.
ஓய்வூதியம் என்பது சொத்துரிமைக்கு இணையான நிலைபெற்ற உரிமை என்றும், எந்தவொரு தவறும் செய்யாத நிலையில் மருத்துவர்களின் ஓய்வூதியத்தில் அரசு கடுமையான குறைப்பைச் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தொற்றுநோய் காலங்கள் உட்படத் தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சேவை ஆற்றிய அரசு மருத்துவர்களை நிதிச் சுமையைக் காரணம் காட்டித் தவிக்க விடக் கூடாது. 2009-ல் ஓய்வுபெற்ற இம்மருத்துவர்களில் பெரும்பாலானோர் தற்போது 76 வயதைக் கடந்த முதியவர்கள்; மேலும் அவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே காலமான நிலையில் இத்தகைய நடவடிக்கை நியாயமற்றது.

ஓய்வூதியதாரர்களால் அரசுக்கு ரூ.300 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்ற அரசின் வாதம் கற்பனையானது என்றும், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் எந்தவொரு அதிகாரப்பூர்வ திருத்தமும் செய்யாமல் வெறும் அரசாணை மூலம் ஓய்வூதியத்தைப் பறிக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கும் அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டு, தனி நீதிபதியின் ரத்து உத்தரவு உயர் நீதிமன்ற அமர்வால் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
