ஓய்வுபெற்ற, உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு உத்தரவு!
பணியிலிருந்து ஓய்வுபெறும் போது அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இடைக்கால மாத ஊதியம் மற்றும் குடும்ப ஊதியத்திற்கான அகவிலைப்படியை உயர்த்தித் தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போதோ அல்லது பணியின்போது உயிரிழக்கும்போதோ, அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ₹10,000 (இதில் எது அதிகமோ அத்தொகை) இடைக்கால ஊதியமாக அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
இடைக்கால மாத ஊதியம் மற்றும் இடைக்கால மாதக் குடும்ப ஊதியத்திற்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஒரே சீராக 60 சதவீதமாக வழங்கிட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 6-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெற்று, 7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படாத நிலை நீடித்தால், ஜனவரி 1, 2026 முதல் அவர்களுக்கு அகவிலைப்படி 262 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
6-வது ஊதியக்குழுவின் கீழ் அடிப்படை ஊதியம் ₹10,000-க்கும் குறைவாக இருந்து, 7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தால், அவர்களின் இடைக்கால ஊதியம் குறைந்தபட்சம் ₹10,000 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இந்த புதிய அரசாணையை உடனடியாகச் செயல்படுத்தத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையருக்குத் தமிழக அரசு வழங்கியுள்ளது.
