கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்வு: தமிழக அரசு அரசாணை!
அரசுப் பெண் ஊழியர்களைப் போலவே, இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்புக் காலத்தை 12 மாதங்களாக உயர்த்தித் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருக்கோயில்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இதுவரை வழங்கப்பட்டு வந்த 9 மாத கால மகப்பேறு விடுப்பு, தற்போது 12 மாதங்களாக அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளது.

திருக்கோயில் பணியாளர்கள் ஓய்வுபெறும் போது, அவர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்கான பணப்பலனைப் பெறும் உச்சவரம்பு, 210 நாட்களிலிருந்து 240 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில், இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் (பணி நிபந்தனைகள்) விதிகள் 2020-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருக்கோயில் பணியாளர்களின் பணிநலன், குடும்ப நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் மூலம் ஆயிரக்கணக்கான கோயில் ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
