அரசு கடன் பத்திர முதிர்வுத் தொகை பெற புதிய விதிமுறைகள் - தமிழக அரசு வெளியீடு!

 
தமிழகம் தமிழ்நாடு தலைமைச் செயலகம் தமிழகம் தமிழ்நாடு தலைமைச் செயலகம்

அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கான முதிர்வுத் தொகை மற்றும் வட்டி வழங்கும் நடைமுறைகளில் சில முக்கிய மாற்றங்களை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டு அரசு கடன் பத்திர ஒழுங்குமுறை விதிகளின்படி, இனி கடன் பத்திரங்களுக்கான முதிர்வுத் தொகை நேரடியாகச் சந்தாதாரர்களின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.

இதற்காக, அசல் சந்தாதாரர் அல்லது கடன் பத்திரத்தை வைத்திருப்பவர், தங்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் இதர ஆவணங்களை உரிய வங்கி அல்லது கருவூலத்தில் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசாணை

குறிப்பாக, 7.98% வட்டி விகிதத்தில் வழங்கப்பட்ட 'தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கடன் - 2026' (7.98% Tamil Nadu State Development Loan 2026) தொடர்பான கடன் பத்திரங்கள் வரும் மே 25, 2026 அன்று முதிர்வடைய உள்ளன.

இந்தக் கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், தங்களின் முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கு ஏதுவாக, 20 நாட்களுக்கு முன்னதாகவே (அதாவது மே மாதம் முதல் வாரத்திற்குள்) சம்பந்தப்பட்ட பொதுக் கடன் அலுவலகத்தில் (ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு முன்கூட்டியே ஒப்படைத்தால் மட்டுமே முதிர்வுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி அன்றைய தினமே வங்கி கணக்கில் பெற முடியும்.

தமிழக அரசு உதவித்தொகை கடன் திட்டம் ரூபாய் ரொக்கம் லோன்

மேலும், வட்டித் தொகை செலுத்துவதற்காகப் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை, கடன் பத்திரதாரர்கள் இனி அலையாமல் தங்களின் முதலீட்டுத் தொகையைப் பெற வழிவகை செய்யும்.

உரிய காலத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், முதிர்வுத் தொகை பெறுவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முதலீட்டாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு தமிழக நிதித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.