பரந்தூர் புதிய விமான நிலையப் பணிகள் நிறுத்தம் - ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்கத் தமிழக அரசு ஆலோசனை!
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதற்காகப் பல கட்டப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அப்பணிகளை நிறுத்தி வைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்துப் புதிய ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னையின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 20 கிராமங்களை ஒருங்கிணைத்து 5,600 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கக் கடந்த திமுக தலைமையிலான அரசு முடிவு செய்தது.

இத்திட்டத்திற்கான நிர்வாக அனுமதி கடந்த 2023 அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்களின் தலைமையில், 300-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நில எடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
திட்டத்திற்குத் தேவையான மொத்த நிலத்தில், இதுவரை சுமார் 30 சதவீதப் பணிகள் நிறைவடைந்து, 1,700 ஏக்கர் நிலம் உரிமையாளர்களிடம் இருந்து நேரடியாகப் பத்திரப் பதிவு மூலம் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் விளைநிலங்களும் நீர்நிலைகளும் பாதிக்கப்படுவதாகக் கூறி, கடந்த ஆண்டு ஏகனாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் அண்மையில் நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் நில எடுப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் புதிய கொள்கை முடிவின் காரணமாக விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் பட்சத்தில், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலங்களின் நிலை குறித்துக் கேள்வி எழுந்துள்ளது. நில உரிமையாளர்கள் ஏற்கனவே இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுவிட்டதால், அந்த நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பதில் சட்ட மற்றும் நிதி ரீதியான சிக்கல்கள் உள்ளன.
இதன் காரணமாக, கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பொதுப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் நோக்கில், அங்குத் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பில் புதிய தொழிற்பூங்கா அமைக்கத் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
முதன்மைக் கட்டமாக, விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் உணவுப் பதப்படுத்துதல் துறை சார்ந்த தொழிற்பூங்காவை அங்கு உருவாக்கலாமா என்பது குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், இது குறித்துத் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
