தமிழகத்தில் 2,640 பார்களை மூட அரசு உத்தரவு; டாஸ்மாக் கடைகளையும் பூட்டப் போவதாக ஒப்பந்தக்காரர்கள் எச்சரிக்கை!
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 2,640 டாஸ்மாக் பார்கள் உடனடியாக மூடத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்தத் திடீர் முடிவால் ஆத்திரமடைந்த பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று முதல் மதுக்கடைகளையும் பூட்டி முற்றுகையிடப் போவதாகப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் காலாவதியான விவகாரத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பல்வேறு திருப்பங்கள் அரங்கேறின. தமிழகத்தில் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களுக்கான அசல் டெண்டர் காலம் கடந்த 2025 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. அதன்பின்னர், முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் மேலும் 6 மாதங்கள் தற்காலிக அவகாசம் வழங்கியிருந்தனர். அந்த அவகாசமும் நேற்றுடன் முழுமையாக முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, இன்று காலை முதற்கட்டமாகப் பார்களுக்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அரசு தரப்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த உத்தரவை ரத்து செய்த தவெக அரசு, மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பார்களையும் உடனடியாக மூட வேண்டும் என்ற புதிய உத்தரவைப் பிறப்பித்தது.
அரசின் இந்த இருவேறு குழப்பமான உத்தரவுகளால் அதிர்ச்சியடைந்த மதுக்கூடக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் அவசரமாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
"எங்களது டெண்டர் காலம் முடிந்தவுடன், புதிய டெண்டர் விடப் போகிறீர்களா என்று தலைமைச் செயலகத்தில் பலமுறை அதிகாரிகளிடம் கேட்டிருந்தோம். அதற்குத் தவெக அரசாங்கம் எங்களைப் பொறுமையாக இருக்கும்படி கூறியது. ஆனால், இப்பொழுது திடீரென 2,640 பார்களையும் உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதுவரை எங்களது கட்டிடங்களுக்கான முறையான வாடகைத் தொகையைக் கூட அரசு எங்களுக்கு ஒழுங்காக வழங்கவில்லை. எங்களது சொந்தக் கட்டிடங்களை இலவசமாக எடுத்துக் கொண்டு அவர்கள் நடத்துவது போல் சர்வாதிகாரமாகச் செயல்படுகிறார்கள்" என்று தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், "அரசு எங்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நாளை ஜூலை 3ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களுடன் சேர்த்து, அவற்றுடன் இணைந்துள்ள அரசு மதுபானக் கடைகளுக்கும் நாங்களே பூட்டுப் போட்டு முழுமையாக மூடிப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தங்களது முடிவை அறிவித்துள்ளனர்.
டாஸ்மாக் பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நாளை மதுக்கடைகளையும் மூட ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், தமிழகத்தின் மதுபான விற்பனை மற்றும் வருவாயில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் அரசு அடுத்தகட்டமாக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
