படிப்புக்குப் பணம் தரும் தமிழக அரசு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்!
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவவும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் மாணவி MBC அல்லது DNC பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும் (சென்னை மாவட்டம் மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது). அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள். பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1,00,000 (ஒரு லட்சம்) மிகாமல் இருக்க வேண்டும்.

விதவைகளின் பெண் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்குத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும். 3 முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ₹500, 6-ம் வகுப்பு முதல் ஆண்டுக்கு ₹1,000 வழங்கப்படும்
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை முழுக்க முழுக்க ஆஃப்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. மாணவி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தைக் கேட்க வேண்டும். விண்ணப்பத்தில் மாணவியின் பெயர், வகுப்பு, சாதி, வருமானம் மற்றும் வங்கி கணக்கு விபரங்களைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்துப் பள்ளியிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளித் தலைமை ஆசிரியர் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.
சாதிச் சான்றிதழ் (MBC/DNC), வருமானச் சான்றிதழ் (வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றது), ஆதார் அட்டை நகல்,மாணவியின் பெயரில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
