தமிழகத்தில் 'ரெஸ்ட்ரோ பார்களை' அதிகரிக்க அரசு திட்டம்!
தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் சாதாரண டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து, அதற்குப் பதிலாக உணவகங்களுடன் கூடிய நவீன 'ரெஸ்ட்ரோ பார்' வசதிகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
சமீபத்தில் உரிமக் காலம் முடிவடைந்ததை ஒட்டி தமிழகம் முழுவதும் 2,300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யவும், பார்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து அரசுக்கான வருவாயை முறைப்படுத்தவும் இந்த புதிய வணிக மாதிரியைத் டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

சாதாரண பார்களில் உள்ள சுகாதாரமற்ற சூழலை மாற்றி, நுகர்வோருக்குத் தரமான உணவு மற்றும் பாதுகாப்பான வசதிகளுடன் கூடிய நவீன உணவக பார்கள் உருவாக்கப்படும். இந்த ரெஸ்ட்ரோ பார்களுக்கு வாட் வரிகள் விதிக்கப்படுவதன் மூலம், அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய் கணிசமாக உயரும்.
உரிமம் இல்லாத பார்கள் மற்றும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது போன்ற சட்டவிரோதச் செயல்களை இந்தத் திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

அண்மையில் நுகர்வோரின் விருப்பத்திற்காக 54 புதிய மதுபான வகைகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ள டாஸ்மாக் நிர்வாகம், தற்போது பார்களின் உள்கட்டமைப்பிலும் இத்தகைய நவீன மாற்றங்களைக் கொண்டு வர உத்தேசித்துள்ளது குடிமகன்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
