92,000 பேரை விடுவித்து தமிழக அரசு உத்தரவு... திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் வாபஸ்!
கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட 600 வழக்குகளைத் திரும்பப் பெறுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 92,000-க்கும் மேற்பட்டோர் வழக்குகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் அவர்கள், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரையிலான காலகட்டத்தில், தங்களது உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் இதற்காகக் கணக்கிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

உரிய சட்ட விதிகளின்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மொத்தம் 600 வழக்குகள் கண்டறிப்பட்டுத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் இவ்வழக்குகளில் சிக்கியிருந்த 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
