தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல் - மண்டல வாரியான பட்டியலை வெளியிட்டது அரசு!

 
டாஸ்மாக் டாஸ்மாக்

தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் விதிகளை மீறி இயங்கி வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்குத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, அந்த அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, மூடப்பட்ட 717 கடைகளின் எண்கள் மற்றும் முழுமையான விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வப் பட்டியலைத் தமிழ்நாடு அரசு தற்போது அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 'போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை நோக்கி இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

டாஸ்மாக்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட கடைகள் அனைத்தும் முழுமையாக முடக்கப்பட்டு, தற்போது அதன் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. மண்டல வாரியாக மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மண்டலம்: 290 கடைகள் (மாநிலத்திலேயே அதிகபட்சமாக இந்த மண்டலத்தில் தான் கடைகள் மூடப்பட்டுள்ளன). கோயம்புத்தூர் மண்டலம்: 179 கடைகள், திருச்சி மண்டலம்: 84 கடைகள். சென்னை மண்டலம்: 82 கடைகள். சேலம் மண்டலம்: 82 கடைகள். 

டாஸ்மாக்

அரசு வெளியிட்டுள்ள இந்த இறுதிப் பட்டியலில், விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளின் பின்னணி விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 717 கடைகளில், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் 276 கடைகளும், பேருந்து நிலையங்களுக்கு அருகில் 255 கடைகளும், கல்வி நிறுவனங்களுக்கு (பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்) அருகில் 186 கடைகளும் இயங்கி வந்தது கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளன.

இந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் மூலம் மொத்தம் 3,474 கடைப் பணியாளர்கள் (மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள்) தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து அரசு தரப்பில் விளக்கமளித்துள்ள மதுவிலக்குத் துறை அமைச்சர், பாதிக்கப்பட்ட 3,474 பணியாளர்களில் ஏற்கனவே 2,331 ஊழியர்கள் அருகில் உள்ள மற்ற டாஸ்மாக் கடைகளுக்குப் பணி இடமாற்றம் (Redeployment) செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணியாளர்களுக்கும் இன்னும் சில தினங்களில் மாற்றுப் பணிகள் முழுமையாக ஒதுக்கப்படும் என்றும், யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.