பொது இடங்களில் புகைப்பிடித்தால் சிறை தண்டனை - தமிழக அரசு தீவிர பரிசீலனை!

 
புகைப்பிடித்தால் சிகரெட்

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் தடையை மீறிப் புகைப்பிடிப்பவர்களுக்கு அபராதத்துடன் சேர்த்துச் சிறை தண்டனை விதிப்பது குறித்தும் தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதைத் தடுக்க ஏற்கனவே சட்டப் பிரிவுகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், தற்போது அபராதம் மட்டுமே முதன்மையாக விதிக்கப்பட்டு வருவதால், பொது இடங்களில் புகையிலைப் பயன்பாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

பொது இடங்களில் சிலர் விடும் புகையைச் சுவாசிப்பதால் அருகிலிருக்கும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு தண்டனையை மேலும் கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சிகரெட்

கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் தடையை மீறிப் புகைப்பிடித்ததாகக் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையினரால் 47,941 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து அபராதத் தொகையாக மொத்தம் ரூ.69,57,500 வசூலிக்கப்பட்டு உள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அபராதம் மட்டுமே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பதால், சிறைத் தண்டனை போன்ற கடுமையான விதிகளைக் கொண்டுவருவதன் மூலமே பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க முடியும் என அரசு தரப்பில் கருதப்படுகிறது.