நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம் - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இட நெருக்கடி மற்றும் நிர்வாகக் காரணங்களால், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலமைச்சரின் முதன்மை அலுவலகம், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகள் அனைத்தும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. 10-வது தளத்தில் தற்போது செயல்பட்டு வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அலுவலகப் பிரிவுகள், முதலமைச்சரின் சமூக ஊடகப் பிரிவு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்களின் அறைகள் அனைத்தும் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் தரைத்தளம், 2-வது மற்றும் 3-வது தளங்களுக்கு உடனடியாக மாற்றப்படுகின்றன. 10-வது தளத்தில் உள்ள சுற்றுலாத் துறையின் பொருட்கள் வைப்பு அறை, அத்துறை செயல்படும் 9-வது தளத்திற்கு மாற்றப்படுகிறது.

மாற்றப்படும் துறைகளுக்கான தளவாடப் பொருட்கள், கணினிகள், கோப்புகள் மற்றும் தொலைபேசி/இணையதள வசதிகளை உடனடியாக அமைத்துத் தருமாறு பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை மற்றும் பொதுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் உள்ள கூட்ட அரங்குகளை உடனடியாக பொதுத் துறையிடம் ஒப்படைக்குமாறு துறைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இடமாற்ற நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன எனத் தமிழ்நாடு அரசு வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
