டாஸ்மாக்கில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை!
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் டாஸ்மாக் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளது.
வனப்பகுதிகள் மற்றும் பொது இடங்களில் காலி மதுபாட்டில்களை வீசுவதைத் தடுத்து, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. எனினும், இதற்கு டாஸ்மாக் பணியாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

காலி பாட்டில்களைச் சேகரித்து, அதற்கான தொகையைத் திரும்ப வழங்குவது தங்களுக்குக் கூடுதல் பணிச்சுமையை உருவாக்குவதாகக் கூறி ஊழியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஊழியர்களின் இந்த எதிர்ப்பை அடுத்து, நீதிமன்றத்தில் விளக்கமளித்த அரசு தரப்பு, "இந்தக் காலி பாட்டில்களைச் சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல், வெளி முகமைகள் அல்லது மாற்று வழிகள் மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தீவிரமாக ஆராயப்படும்" என்று தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதிகள், இத்திட்டத்தில் முறைகேடுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யக் கடுமையான சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
"டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்யும்போது, திரும்பப் பெறுவதற்காகக் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் பட்சத்தில், அந்தத் தொகையைக் கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கணினி ரசீதில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இத்திட்டத்தில் எவ்வித முறைகேடுகளோ, கூடுதல் கட்டண வசூலோ இருக்கக் கூடாது" என உத்தரவிட்டனர். இதற்குப் பதிலளித்த அரசு, "டாஸ்மாக் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஊழலை இந்த அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது; தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மதுபாட்டில்களில் கியூஆர் கோடு அச்சிடும் முறைகள் மற்றும் வெளி முகமைகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், நீதிமன்றம் இந்த வழக்கிற்கு ஒரு காலக்கெடுவை விதித்துள்ளது.
இத்திட்டத்தை ஊழியர்களுக்குப் பாதிப்பின்றித் தமிழ்நாடு முழுவதும் முழுமையாக மாற்றியமைத்துச் செயல்படுத்துவது குறித்த விரிவான இறுதி அறிக்கையை அடுத்த 8 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
