நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

 
பார்த்திபன்

சாதி மற்றும் மதமற்றவர் எனச் சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்கும் வகையில் புதிய சட்டம் இயற்றக் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிப்பதற்காகச் சென்னை உயர் நீதிமன்றம் மேலும் நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சாதி, மத அடையாளங்கள் இல்லாமல் வாழ விரும்புபவர்கள் மற்றும் அத்தகைய சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எளிய முறையில் சான்றிதழ் வழங்கும் விதமாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

சாதி மதம் பார்த்திபன்

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாகப் பதிலளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த மனு மீதான பதிலைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு மேலும் நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

புதிதாகச் சட்டம் இயற்றப்படும் பட்சத்தில், சாதி மற்றும் மதமற்றவர் எனச் சான்று கோரி விண்ணப்பிக்கும் எண்ணற்ற நபர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நிவாரணமாகவும் பயனுள்ளதாகவும் அமையும் என்று நடிகர் பார்த்திபன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.