தமிழகமே அதிர்ச்சி... ஒரே மாதத்தில் 4-வது கடத்தல் முயற்சி - மர்ம நபர்களின் கையைக் கடித்து தப்பிய 7 வயது சிறுமி!
விழுப்புரம் மாவட்டம் கண்டமானடி கிராமத்தில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்களின் கையைத் துணிச்சலாகக் கடித்துவிட்டு அந்தச் சிறுமி உயிர் தப்பியுள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, தனது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சிறுமியின் அருகே சென்று திடீரென அவரது வாயைப் பொத்தி பைக்கில் தூக்கி வைத்துக் கொண்டு வேகமாகப் புறப்பட்டனர்.

கடத்தல்காரர்கள் தன்னைக் கடத்திச் செல்வதை உணர்ந்த சிறுமி, சத்தமிட முயன்றபோது மர்ம நபர்கள் அவரது வாயை இறுக்கமாகப் பொத்தினர். இதனால் சுதாரித்துக் கொண்ட சிறுமி, கடத்தல்காரர்களின் கையைப் பலமாகக் கடித்து விட்டுக் கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பைக்கில் அந்த மர்ம நபர்களைப் பின்தொடர்ந்து துரத்தினர். ஒருபுறம் சிறுமி கையைக் கடித்த வலி, மறுபுறம் பொதுமக்கள் துரத்தி வருவதைக் கண்ட மர்ம நபர்கள், சிறுமியை வழியிலேயே இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த திகில் சம்பவம் குறித்து துணிச்சலாக தப்பிய சிறுமி கூறுகையில், "இரவு நான் அங்கு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டு பேர் திடீரென என் வாயைப் பொத்தி பைக்கில் கூட்டிக்கொண்டு போனார்கள். நான் உடனே அவர்கள் கையைக் கடித்துவிட்டுச் சத்தமாகக் கத்தினேன். அதனால் என்னை அப்படியே இறக்கி விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் குழந்தையைக் கடத்த முயலும் நான்காவது சம்பவம் இதுவாகும். தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இத்தகைய சம்பவங்களால், பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விழுப்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குழந்தைகள் கடத்தல் கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுமி காணாமல் போய் 1 மாதம் ஆன நிலையில், இன்னும் சிறுமியைத் தேடும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த அதிர்ச்சியாக விழுப்புரத்தில் அடுத்தடுத்து கடத்தல் முயற்சிகள் நடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
