தமிழகமே அதிர்ச்சி... 14 வயது மாணவியை மது குடிக்க வைத்து பலாத்காரம்... ஓட்டுநரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!
திருச்சியில் தனது தோழியைப் பார்க்கச் சென்ற 14 வயது பள்ளிச் சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி மது ஊற்றிக் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரைப் பொதுமக்கள் பிடித்துத் தர்மஅடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், நேற்று தனது தோழியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு தனியார் வாகன ஓட்டுநர், அச்சிறுமியைக் நயவஞ்சகமாகப் பேசி, யாருமில்லாத ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமி என்றும் பாராமல், அவரை மிரட்டிக் கட்டாயப்படுத்தி மதுபானத்தை ஊற்றிக் கொடுத்துள்ளார். மதுவின் தாக்கம் தாங்காமல் அந்த சிறுமி நிலைதடுமாறி, சுயநினைவை இழந்து மயக்கமடைந்துள்ளார்.

சிறுமி மயங்கியதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அந்த ஓட்டுநர், சிறுமிக்குக் கடுமையான பாலியல் தொல்லைகளையும், வன்கொடுமையையும் அளித்துள்ளார். இதற்கிடையே சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியைத் தேடி வந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும், சிறுமி மதுபோதையில் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் அலங்கோலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்று, அங்கிருந்து தப்பியோட முயன்ற ஓட்டுநரைச் சுற்றி வளைத்துப் பிடித்து அடித்து வெளுத்தனர். பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ஓட்டுநரையும் மீட்டுப் போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துச் சிறுமியின் உறவினர்கள் மற்றும் அங்கிருந்த சாட்சிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மைனர் சிறுமிக்கு மது கொடுத்துப் பலாத்காரம் செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடுமையான பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
