தமிழகமே அதிர்ச்சி... போதை ஊசி செலுத்தி 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம்!
தமிழகத்தில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்யும் விதத்தில், சேலம் தாதகாப்பட்டி பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்குப் போதை ஊசி செலுத்தி, அவர் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி அதிர வைத்திருக்கிறது. இந்நிலையில், சேலம் மாநகரக் காவல்துறை தற்போது இது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சேலம் மாவட்ட மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டுச் சேலம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு அந்தப் பெண்ணின் உடல்நிலையில் சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அதிர்ச்சியூட்டும் பல விபரங்கள் வாக்குமூலமாக வெளிவந்துள்ளன.

அந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, தடை செய்யப்பட்ட வீரியமிக்க போதை மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து, அதனைச் சிரிஞ்ச் மூலமாகத் தங்களது நரம்புகளில் நேரடியாகச் செலுத்திப் போதை ஏற்றியது தெரிய வந்துள்ளது. தனக்குப் போதை மாத்திரைகளைத் தாதகாப்பட்டியைச் சேர்ந்த பூபதி (23) மற்றும் அஜித் (19) ஆகிய இருவர் தான் தொடர்ந்து சப்ளை செய்து வந்ததாக அந்த இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இளம்பெண், பூபதி மற்றும் அஜித் ஆகியோர் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட ரகசிய இடத்தில் ஒன்றாக அமர்ந்து இந்த ஆபத்தான போதை ஊசியைச் செலுத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு போதை ஊசி செலுத்திக் கொண்ட சமயங்களில், அந்த இளம்பெண் சுயநினைவின்றி இருந்த போது அவரது ஆண் நண்பர்களால் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இளம்பெண்ணின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, சேலம் தனிப்படை போலீசார் போதை மாத்திரை மற்றும் பலாத்காரப் புகாரில் தொடர்புடைய பூபதி (23) மற்றும் அஜித் (19) ஆகிய இருவரையும் உடனடியாகப் பிடித்து ரகசியக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமறைவாகியுள்ள 'விஜி' என்ற மற்றொரு முக்கிய நபரைத் தேடிப் போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
இளம் தலைமுறையினர் மத்தியில் இத்தகைய போதை ஊசி கலாச்சாரமும், அதனால் அரங்கேறும் குற்றங்களும் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
