தமிழகமே அதிர்ச்சி... மீண்டும் லாக்-அப் டெத்?! - விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - தூத்துக்குடியில் போராட்டம்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் காவல் நிலையத்தில் போலீசார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அடுத்தடுத்து காவல்நிலைய உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகிறது.
ரூ.160க்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி, போலீசாரால் துன்புறுத்தப்பட்டு, அடித்துக் கொல்லபட்டது ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் தூத்துக்குடியில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது பதைபதைக்க வைக்கிறது. தூத்துக்குடியில் விசாரணைக்காகக் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் (26) என்ற இளைஞரை வழக்கு ஒன்றின் விசாரணைக்காகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அருணாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இளைஞரின் உயிரிழப்பிற்கு காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலே காரணம் என அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கொந்தளித்துள்ளனர். "காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் அருணாச்சலத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயமே அவரது உயிரிழப்பிற்குக் காரணம்" எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

குற்றத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக உறவினர்கள் திரண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
