தமிழகமே அதிர்ச்சி... பிளஸ்-2 மாணவியைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற காதலன்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, பிளஸ்-2 படித்து வரும் பள்ளி மாணவி ஒருவரைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, ஆள் நடமாட்டமற்ற காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற பெயிண்டர் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் உட்பட மொத்தம் மூன்று பேரைப் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இப்பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (19) என்ற கட்டடப் பெயிண்டர், அந்த மாணவியைக் காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தைகள் பேசியுள்ளார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை, சஞ்சய் தனது மோட்டார் சைக்கிளில் கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு, சாத்தான்குளம் அருகே உள்ள கருமேனி ஆற்றங்கரைப் பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

திட்டமிட்ட சதியின்படி, காட்டுப் பகுதிக்குச் சென்றவுடன் சஞ்சய் தனது நண்பர்களான உபேஷ் தர்மா மற்றும் முத்தரசன் ஆகிய இருவருக்கும் ரகசியமாகத் தகவல் கொடுத்து, அவர்களையும் அதே இடத்திற்கு வரவழைத்துள்ளார். காட்டுப் பகுதியில் மாணவியை வைத்து அந்த மூன்று இளைஞர்களும் தவறான நோக்கத்தில் வற்புறுத்தி, கூட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது, மாணவி பயந்து கூச்சலிட்டுள்ளார்:
அந்தச் சமயத்தில், ஆற்றங்கரைப் பகுதியில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த உள்ளூர் பொதுமக்களுக்குப் புதருக்குள் இருந்து மாணவியின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே துணிச்சலுடன் அங்கு விரைந்து சென்ற பொதுமக்கள், சதிச் செயலில் ஈடுபட முயன்ற சஞ்சய், உபேஷ் தர்மா மற்றும் முத்தரசன் ஆகிய மூன்று இளைஞர்களையும் நாலாபுறமும் வளைத்துப் பிடித்துக் தர்ம அடி கொடுத்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியையும், பிடிபட்ட மூவரையும் மீட்டுச் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) உத்தரவின் பேரில், சாத்தான்குளம் போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த முறைப்படியான புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மைனர் சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை முயற்சி என்பதால், சஞ்சய், உபேஷ் தர்மா, முத்தரசன் ஆகிய மூவர் மீதும் கடுமையான போக்சோ மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பெண் ஆலோசகர்கள் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவியைக் காதலன் என்ற பெயரில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பலத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
