போதையில் தள்ளாடும் தமிழகம்.. 15 நாட்களில் 16,031 பேர் சிக்கினார்கள் - ரூ.3.13 கோடி அபராதம் வசூல்!

 
குடிபோதையில் வாகனம் சோதனை குடிபோதையில் வாகனம் சோதனை

தமிழகம் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையை மது, கஞ்சா போதையில் நாம் சிக்க வைத்திருக்கிறோம். போதையில் உழன்றுக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறை எப்படி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். புள்ளிவிவரங்களின் படி தினந்தோறும் தமிழகத்தில் 1,000க்கும் அதிகமானோர் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்குகின்றனர். இதில், குடிபோதையில் வாகனங்களை இயக்காதவர்கள், போலீசாரிடம் சிக்காதவர்கள் என்று எத்தனைப் பேர்? 

தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராகக் காவல்துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் கடந்த 15 நாட்களில் 16,000க்கும் அதிகமான வாகன ஓட்டிகள் சிக்கியுள்ள அதிர்ச்சி விபரம் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மாநிலத் தலைமையகக் காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஜூன் 1-ஆம் தேதி முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 16,031 வழக்குகள் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குடிபோதையில் வாகனம் சோதனை

இதில் விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து தற்போது வரை ஒட்டுமொத்தமாக ரூ. 3.13 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், உரிய ஆவணங்கள் மற்றும் அபராதம் செலுத்தாதவர்களின் 14,001 வாகனங்கள் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்களை ஒரு நாள் கணக்காகப் பகுப்பாய்வு செய்யும் போது மாநிலத்தில் நிலவும் போதை கலாச்சாரத்தின் தீவிரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாநிலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 1,001 வழக்குகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது பாய்கிறது. இதன் மூலம் நாளொன்றுக்குச் சராசரியாக ரூ. 19.56 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

குடிபோதையில் வாகனம் சோதனை

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 185-ன் படி, ஒருவருடைய 100 மில்லி லிட்டர் ரத்த மாதிரியில் 30 மில்லிகிராமிற்கு அதிகமாக மதுவின் அளவு இருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதன்படி: முதல் முறை தவறு செய்பவர்களுக்கு ரூ. 10,000 அபராதம் மற்றும்/அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இரண்டாவது முறை மீண்டும் சிக்கினால் அபராதம் ரூ. 15,000 ஆக உயர்த்தப்படுவதோடு, 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஓட்டுநர் உரிமம் நிரந்தர ரத்து போன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும். அண்மைக் காலமாக வார இறுதி நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் விபத்துகளைத் தவிர்க்கப் போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டுமன்றி மாவட்ட நெடுஞ்சாலைகளிலும் இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், விதிமீறுபவர்கள் தொடர்ந்து சட்டத்தின் பிடியில் சிக்கி வருகின்றனர்.