மூச்சு திணறும் தமிழகம்... முக்கிய நகரங்களில் அதிகரித்த காற்று மாசு!
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், பட்டாசுகளை வெடிப்பது குறித்து நிபந்தனைகளும், அறிவுறுத்தல்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் செய்யப்பட்டாலும், அவை அனைத்தும் காற்றில் பறந்தது.
நேற்று அதிகாலை முதலே பல மாவட்டங்களிலும் மழை துவங்கிய நிலையில், காத்திருந்த மக்கள் மழை விட்டதும் வெடிக்கத் துவங்கினார்கள். நள்ளிரவைக் கடந்தும் பல இடங்களில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர். வெடிச்சத்தம் குறித்தோ, காற்று மாசு குறித்தோ, குப்பைக் கூளங்களாக குவிப்பது குறித்தோ பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைந்த அளவிலேயே இருந்தது. கால நேரமின்றி மக்கள் பட்டாசுகளை வெடித்து தீர்த்தனர்.

இதனால் சென்னை நகரின் காற்று மாசு மோசமான நிலையை எட்டியது. பொதுவாக சென்னையில் காற்று மாசு அளவு 100 முதல் 150 என்கிற அளவில் இருந்து வந்தது. நேற்றைய நிலவரத்தை பொறுத்தவரையில் மணலியில் 344 குறியீடும், நுங்கம்பாக்கத்தில் 272 என்கிற குறியீடும் இருந்தது. பொத்தேரியில் 151, அம்பத்தூரில் 150 என்கிற அளவில் இருந்தது. வட சென்னையை விட தென் சென்னையில் காற்று மாசு குறைவாகவே இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதே போல் மதுரையில் காற்று மாசு 188 என்ற அளவிலும், கோவையில் 178 என்கிற அளவிலும் உள்ளது.சேலத்தில் 275 என்கிற அளவிலும், திருப்பூரில் 233, தூத்துக்குடியில் 45 என்கிற அளவில் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. மிக மிக அதிகபட்சமாக திருச்சியில் 321, வேலூரில் 318 என்கிற அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
