3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற முடியாது: உள்ளாட்சி ஊழியர்களுக்குப் புதிய இடமாற்ற ஆணை!
நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றுவோர் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கான புதிய இடமாற்ற ஆணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் யாரும் தொடர முடியாது. மே 31-ஆம் தேதிக்குள் 3 ஆண்டுகள் நிறைவு செய்வோரும் கட்டாயமாக வேறு இடத்திற்கு மாற்றப்படுவர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் மே 31 வரை மட்டுமே பணியிட மாறுதல்கள் செய்யப்படும் என்றும், மார்ச் 1 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் ஓய்வு பெறுவோர், மாற்றுத்திறனாளிகள், கணவன்-மனைவி ஒரே இடத்தில் பணிபுரிய விரும்புவோர் மற்றும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டோருக்குச் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.இந்தப் புதிய அரசாணை தமிழக உள்ளாட்சி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
