தமிழகத்தில் ரூ.50 கோடி இழப்பு... அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்!

 
அட்டைப்பெட்டி

கிராப்ட் காகிதத்தின் திடீர் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரிச் சுமையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் ரூ.50 கோடி அளவிற்கு உற்பத்திப் பாதிப்பு மற்றும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிராப்ட் காகிதத்தின் விலை 8 முறை உயர்த்தப்பட்டு, டன் ஒன்றுக்கு ரூ.8,000 வரை அதிகரித்துள்ளது. காகிதத்தை முழுப் பணம் கொடுத்து உடனடியாக வாங்க வேண்டிய சூழலில், உற்பத்தி செய்யப்படும் அட்டைப்பெட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் கடன் அடிப்படையில் விற்க வேண்டிய நிலையும் இத்தொழிலை கடுமையாகப் பாதித்துள்ளது.

தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தால், தமிழகத்தில் உள்ள சுமார் 2,500 நிறுவனங்களும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலையின்றி முடங்கியுள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.25 கோடி வீதம், 2 நாட்களில் ரூ.50 கோடி மதிப்புடைய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலில் தமிழகத் தொழில்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு காகித விலையைச் சீரமைக்க வேண்டும், ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து காகிதத்தை இறக்குமதி செய்து சீரான விலையில் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க கோவை மண்டல தலைவர் தண்டபாணி வலியுறுத்தியுள்ளார்.