BIG NEWS... இனி பத்திரப்பதிவுக்கு ஆன்லைனில் டோக்கன் !
தமிழகத்தில் சொத்து வாங்குவோர் மற்றும் விற்போர் பத்திரப்பதிவு செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், பதிவுத்துறை புதிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பத்திரங்களைத் தாங்களே தயாரித்து, பதிவு செய்வதற்கான நாள் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்காக பதிவுத்துறையின் TNREGINET இணையதளத்தில் பொதுமக்களுக்கான தனி நுழைவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலில் அடிப்படை விவரங்களை அளித்து, தங்களுக்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.
பின்னர் பதிவு செய்ய வேண்டிய ஆவண வகையைத் தேர்வு செய்து, நான்கு கட்டங்களாகக் கேட்கப்படும் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். சொத்து மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் தகவல்களை உள்ளிட்டதும், பத்திரத்தின் வரைவு தயாராகும். தொடர்ந்து தேவையான விவரங்களைச் சமர்ப்பித்து, அடையாள எண் பெறலாம்.

ஆன்லைனில் டோக்கன் பெறுவது எப்படி?
பத்திரப்பதிவுக்கான நாள் மற்றும் நேரத்தை இணையதளத்திலேயே தேர்வு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். அந்த டோக்கனுடன் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பதிவு நடைமுறைகளை நிறைவு செய்யலாம்.
இந்த வசதி மூலம் ஆவண எழுத்தர்களைச் சார்ந்திருப்பது குறைவதுடன், பத்திரப்பதிவு நடைமுறைகளையும் பொதுமக்கள் எளிதாக மேற்கொள்ள முடியும்.
