தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! 29 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

 
ஆரஞ்சு

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னல் மழை

நாளை 29 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அக்டோபர் 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை விடுமுறை

அக்டோபர் 17ஆம் தேதி திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், காஞ்சீபுரம் ஆகிய 17 மாவட்டங்களிலும், அக்டோபர் 18ஆம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.